Thursday, 16 August 2012

தந்தை வழிப் பாட்டி-நினைவலைகள்

இந்த பதிப்பு எந்தன் தந்தை வழிப் பாட்டி பற்றிய நினைவலைகள்.
நார் மடிப் புடவையை வழித்த தலையின் மேல் மூடிய வண்ணம் அணிந்து பள்ளிஅக்ராஹாரத்து பாட்டனாரின் வீட்டில் தனி அரசு நடத்தி வந்த நாட்கள். பாட்டனாரின் மறைவுக்கு பின்னர் நல நிலயில் இருக்கும் நான்கு மகன்களிடமும் அன்பும் பாசமும் கொண்ட ஒரே மகளிடமும் நிலையாய் இல்லாமால் பள்ளிஅக்ராஹாரத்து வீட்டில் மிகுதியான காலத்தை கழித்து அறுவடை முடிந்த பின் உள்ள சில வாரங்கள் எங்கள் எல்லோர் வீடுகளுக்கும் வந்து செல்வார்கள். அந்த வருகையின் எதிர்பார்ப்புகள் .. ஆம் புதிய நெல் அறுத்த பச்சை அரிசி , நல்ல பயறு இவை  சிறிய  சாக்கு பைகளில்.... எங்கள் வீட்டில் இறங்கிய உடன் பலா பலகையை எடுத்து பய்ரினை உருட்டி கற்கள் நீக்குவார். அதன் பின்னர் எந்திரத்தை நன்கு ஆய்வு செய்து சரியான படி இருந்தால் பயரினை  அரைத்து பொடி செய்வார்கள். ஒரு புறம் அன்னையாரின் அனுபவத்தில் சேமித்த வீட்டு  வெண்ணை உருக்கப்பட்டு புதிய நெய்யாய் மணக்கும். பாட்டியின் வரவிற்கென்றே காத்திருக்கும் மண்டை வெல்லம்...
நன்கு பொடி செய்த பயத்த மாவுடன், மணக்கும் நெய்யும் இனிய வெல்லமும் இணைந்து  வரும் கலவையை இளம் சூட்டில் சீராக உருண்டை செய்து முதலில்
உம்மாச்சிக்குஅர்ப்பணம் செய்தபின்
குட்டியாய் இருக்கும் எனக்கு முன்னுரிமை- தின்னத் தருவதில்.

காலங்கள் எதுவாக இருக்கட்டும்.. காலை நான்கு மணிக்கு நிச்சயம் விடியல். நல்ல filter காபி ... சூரியன் உதிக்கும் முன்பே குளித்து உயரத்தில் கம்பு கொடியில் உலரும் நார் மடி
புடவை உடுத்தி நெற்றியில் திருநீறணிந்து கழுத்தில் அணிந்த ஸ்படிக மாலையை கையில் எடுத்து இறைவனை நினைத்து ஒரு மணி ஜெபம்.. "மடி மாறாத என் வழி தனி வழி" என்று அந்த நாட்களிலேயே தனி பாட்டை வகுத்து ஆனால் இளைய தலைமுறையின் உணருவகளுக்கு மதிப்பளித்து வாழ்ந்தவர். எல்லா பிராமணர் குடும்பங்களில் மணமான பெண்கள் 9 கஜம் புடவை உடுப்பது என்பது எல்லோரும் ஒப்புக்கொண்ட மரபு . எங்கள் அன்னையாரின் வேண்டுதலுக்கு செவி மடுத்து முக்கிய நாட்கள் தவிர மற்ற நாட்களில் எளிதாய் உடுத்தும்
6 கஜம் உடுத்திட இணக்கம் தெரிவித்தது.. இது எனக்கு செவி வழி வந்த செய்தி.

அவர்களின் வாழ்க்கையின் தாக்கம் மிக அதிக அளவில் எங்கள் அன்னையிடம் இக்காலத்தில் காண முடிகிறது. அகவை எண்பதுக்கும் மேல் ஆகியும் தன மக்களுடன் வாழாமல் தன தினப்படி வேலைகளை தானே திறம்பட செய்து- யாக்கை இயன்றாலும் இயலா விட்டாலும்.....   அனைவரின் நலனில் அக்கறை கொண்டு வாழும் உயிர்.